6 ரன்கள் பின்தங்கியிருந்தும் டிக்ளேர் செய்த இந்தியா.. இலங்கை பயிற்சி போட்டியில் பவுலிங் வியூகம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையிலும் தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக டிக்ளேர் செய்தது. 3வது நாளில் பந்துவீச்சாளர்களுக்கு முழுமையான பயிற்சி அளிப்பதற்காகவே இந்திய அணி இந்த முடிவை எடுத்துள்ளது.
கொழும்பில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை தரப்பில் ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷான் பெர்னாண்டோ 66 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் 142 ரன்களுடனும், கடைசி கட்டத்தில் 4 சிக்சர்களை விளாசிய குர்னூர் பிரார் 18 பந்துகளில் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேலும் ரவீந்திர ஜடேஜா 63 ரன்களும், மானவ் சுதர் 41 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் சேர்த்தனர்.
3வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன், இலங்கையின் ஸ்கோரை விட 6 ரன்கள் குறைவாக இருந்தபோதிலும் இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் முழுமையாக பந்துவீச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்திய அணி இந்த முடிவை எடுத்தது.
இதை அடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு, முகமது சிராஜ் தனது துல்லியமான பந்துவீச்சால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். அவர் 3 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அடுத்து பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினார். 3வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications

