மிரட்டிய அறிமுக பவுலர்.. மிடில் ஆர்டரில் காப்பாற்றிய சூர்யகுமார்..முதல் டி20ல் இந்தியா அபார வெற்றி!
கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 157 ரன்களை குவித்தது.

பிஷ்னாய் அசத்தல் பவுலிங்
அந்த அணியில் கெயில் மேயர்ஸ் 31 ரன்கள், நிகோகலஸ் பூரண் 61 ரன்கள் ஆகியோர் மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக விளையாட மற்றவர்கள் அனைவரும் சொதப்பினர். அறிமுக வீரர் ரவி பிஷ்னாய் ஒரே ஓவரில் 2 விக்கெட்களை சாய்த்து வெஸ்ட் இண்டீஸின் அஸ்திவாரத்தையே சாய்த்தார். இறுதியில் கேப்டன் பொல்லார்ட் மட்டும் 24 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை சேர்த்தது.

அட்டகாச ஓப்பனிங்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அட்டகாசமான ஓப்பனிங் கிடைத்தது. கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். மொத்தமாக 19 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷான் 42 பந்துகளில் 35 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களை சேர்த்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல்
இதன் பின்னர் வந்த விராட் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஸ்டன் சேஸின் பந்துவீச்சில் 17 ரன்களுக்கு நடையை கட்டினார். ரிஷப் பண்ட்-ம் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சிக்கொடுத்தார். சற்று தடுமாற்றத்தில் இருந்த இந்திய அணியை மீண்டும் ஒருமுறை சூர்யகுமார் யாதவ் தான் காப்பாற்றினார்.
Recommended Video

அபார வெற்றி
18 பந்துகளை சந்தித்த அவர் 34 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக இருந்த வெங்கடேஷ் ஐயர், 13 பந்துகளில் 24 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 3போட்டிகள் கொண்ட தொடரிலும் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications