IND vs WI: நடுவரை பார்த்து கத்திய விவகாரம்.. 2 வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு ஐசிசி தண்டனை
மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதற்காக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் ரோவ்மேன் பொவெல் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகிய இருவருக்கு தலா டிமெரிட் புள்ளியை தண்டனையாக ஐசிசி விதித்துள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு வேறு சம்பவங்களுக்காக இவ்விரு வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. மாயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பிறகு பந்தை பேட்டால் அடித்ததற்காக முன்னாள் கேப்டன் பொவெல்லும், 13-வது ஓவரில் வைடு தரப்படாததால் நடுவரிடம் கோபமாக கத்தியதற்காக நடுவரிசை பேட்டர் ரூதர்ஃபோர்ட்டும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில் மாயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பொவெல், கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான ஐசிசி நடத்தை விதியின் பிரிவு 2.2-ஐ மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதேபோல, 13-வது ஓவரில் வைடு வழங்கப்படாததால் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ரூதர்ஃபோர்ட், பிரிவு 2.8-ஐ மீறியுள்ளார்.
போட்டி நடுவர் பிரகாஷ் பட் முன்மொழிந்த தண்டனைகளை இரு வீரர்களும் ஒப்புக்கொண்டதால், இது குறித்த முறைப்படியான விசாரணை தவிர்க்கப்பட்டது. கள நடுவர்கள் ஜெயராமன் மதனகோபால், ரோஹன் பண்டிட், மூன்றாவது நடுவர் நிதின் மேனன் மற்றும் நான்காவது நடுவர் வீரேந்தர் சர்மா ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். ஐசிசி நடத்தை விதியின் லெவல் 1 மீறலுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, போட்டித் தொகையிலிருந்து அதிகபட்சமாக 50 சதவீத அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு டிமெரிட் புள்ளிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இந்த 2-வது டி20 போட்டியில் 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 4-வது இடத்தில் களமிறங்கிய பொவெல் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரரான ரூதர்ஃபோர்ட் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார். இவர் கேப்டன் ஷாய் ஹோப்புடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 54 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரூதர்ஃபோர்ட் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டபோதிலும், தனது அணி வெற்றி பெறுவதற்கான வலுவான நிலையை உறுதி செய்தார். இந்தத் தொடரில் ரூதர்ஃபோர்ட் அடித்த இரண்டாவது அரைசதம் இதுவாகும். தொடரின் முதல் போட்டியிலும் அவர் அரைசதம் அடித்து, தனது அணி 171 ரன்கள் குவிக்க உதவியிருந்தார்.


Click it and Unblock the Notifications


