அவரே பால் போடுவாராம்.. அப்புறம் அவரே கேட்ச் பிடிப்பாராம்.. செம ஓவர்.. போட்டியை மாற்றிய புவி!
போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. புவனேஸ்வர் குமார் அதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
குறிப்பாக இந்தியா இக்கட்டான சமயத்தில் இருந்த போது, புவனேஸ்வர் குமார் பெரிய திருப்பத்தை கொடுத்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதற்கு கோலியின் சதம் முக்கியமான காரணம் தான் என்றாலும் புவனேஸ்வரின் பந்துவீச்சும் முக்கிய காரணம் தான்.

இந்தியா ஸ்கோர்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 279 ரன்கள் எடுத்தது. கோலி சதமும், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதமும் அடித்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் என்பது போல இருந்தது. எனினும், கோலி, ஸ்ரேயாஸ் சென்ற பின் கடைசி ஓவர்களில் தடுமாற்றம் இருந்தது.

மழையால் தடை
இந்தியா எடுத்த ஸ்கோர் வெற்றி பெற போதுமானதா என்ற சந்தேகம் இருந்தது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங் செய்த போது அடிக்கடி மழை குறுக்கிட்டது. போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பூரன் - சேஸ் ஆட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்தாலும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களத்தில் இருந்தார். அவருடன் சேஸ் ஜோடி சேர்ந்து போட்டியை தங்கள் பக்கம் மாற்றினர். ரன் ரேட் குறைவாக இருந்தாலும், கடைசி நேரத்தில் அடித்து ஆடுவார்கள் என்பதால் அவர்கள் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி.

புவனேஸ்வர் ஓவர்
35வது ஓவரில் புவனேஸ்வர் குமார் கையில் பந்தை கொடுத்தார் கேப்டன் கோலி. அந்த ஓவரின் இரண்டாம் பந்தில் பூரன் விக்கெட்டை எடுத்தார் புவனேஸ்வர். அதே ஓவரின் ஐந்தாம் பந்தில் சேஸ் கொடுத்த கேட்ச்சை பந்து வீசிய வேகத்தோடு ஓடிச் சென்று பிடித்து அவுட் ஆக்கினார் புவனேஸ்வர்.

இந்தியா வெற்றி
அது தான் போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் இழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் வேகம் குறைந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து வந்த ஹோல்டர், பிராத்வைட் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் தோல்வி உறுதியானது. 42 ஓவர்களில் 210 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

அசத்தல் பந்துவீச்சு
புவனேஸ்வர் குமார் தன் அசத்தல் பந்துவீச்சில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் 31 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications