போர்ட் ஆஃப் ஸ்பெயின் : தான் 65 ரன்கள் அடித்து இருந்த போது மிகவும் சோர்ந்து விட்டதாகவும், அதன் பின் போராடி தான் சதம் அடித்ததாகவும் கூறி உள்ளார் கோலி.
இந்திய அணியின் கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டிக்குப் பின் இந்திய வீரர் சாஹலுக்கு பேட்டி அளித்தார் கோலி. அந்தப் பேட்டியில் தான் போட்டியின் இடையே டான்ஸ் ஆடுவது குறித்தும், அணிக்காக உழைப்பது குறித்தும் பேசினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் குவித்து இருந்தார். இது அவரது 42வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். இந்த சதம் மூலம் இந்திய அணி 279 ரன்கள் குவித்தது. போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.
போட்டிக்குப் பின் சாஹல் தன் கேப்டனை பேட்டி எடுத்தார். அப்போது முதல் போட்டியின் இடையே கோலி டான்ஸ் ஆடியது குறித்து கேள்வி எழுப்பினார். எப்போது பாட்டை கேட்டாலும், எனக்கு டான்ஸ் ஆட வேண்டும் என்பது போல இருக்கும் என்றார் கோலி.
மேலும், "நான் களத்தில் என்னளவில் அனுபவிக்க விரும்புகிறேன். நான் கேப்டனா? இல்லையா? என்பது எல்லாம் முக்கியம் இல்லை. நான் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வகைக்குள் நான் நிற்க விரும்பவில்லை" என்றார்.
"இன்று (போட்டி அன்று) காலை நேரத்தில் மழை பெய்தது. அதனால் வெப்பமாக இருந்தது. உண்மையில், நான் 65 ரன்கள் எடுத்த போது சோர்ந்து விட்டேன். ஆனால், சூழ்நிலை என்னை அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டது" என்றும் குறிப்பிட்டார் கோலி.
"நான் கிரீஸில் நிற்க வேண்டும் என்பது அவசியம். அணியாக முதல் மூன்று வீரர்களில் ஒருவர் பெரிய ஸ்கோரை எடுக்க முயற்சித்து வருகிறோம். ஷிகர், ரோஹித் கடந்த காலங்களில் நிறைய நமக்கு செய்துள்ளார்கள். ஆனால், இன்று அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. அதனால், ஒருவர் பெரிய இன்னிங்க்ஸ் ஆட வேண்டியதாக இருந்தது" என்றார் கோலி.
"அணிக்காக கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலை எனக்கு உள்ளது. ஒரு முக்கியமான கேட்ச் அல்லது ரன் அவுட் என்றால் அது எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார் கோலி.