போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் தொரரை 2-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 237 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வசப்படுத்தியது. கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளிடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. தொடரை ஏற்கெனவே இந்திய அணி கைப்பற்றி விட்டதால் நெருக்கடி இல்லாமல் இந்திய அணி இப்போட்டியில் களமிறங்குகிறது. மேலும், இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முடித்து தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் கேப்டன் விராத் கோஹ்லி தீவிரமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் அஸ்வின் இந்த தொடரில் இரண்டு சதம் விளாசியுள்ளதோடு, 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்தத் தொடரில் அஸ்வின் 16 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.முகமது சமி 11 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கும்மின்ஸ் 9 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தர்கள் பட்டியலில் விராத் கோஹ்லி 251 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரகானே 243, கேஎல் ராகுல் 236 மற்றும் அஸ்வின் 235 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேற்கிந்திய அணி வீரர் சேஸ் 190 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கில் ராகுல், ரஹானே, விராட் கோலி, சாஹா ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அஸ்வின் கலக்குகிறார்.
ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏற்கெனவே தொடரை இழந்து விட்டதால், இந்த தொடரில் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும் என தெரிகிறது.