Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: "பேட்ல படவே இல்ல" டிஆர்எஸ் முடிவால் கொந்தளித்த வெஸ்ட் இண்டீஸ் கோச்..என்ன நடந்தது?

கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைக் குவித்தது. இந்த இன்னிங்ஸின் போது ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தொடக்கத்தில் சற்று நிதானமாகவே விளையாடினர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே ரன்களைக் கட்டுப்படுத்தியதால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு விளையாடிய இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக் கொடுக்கவில்லை என்றாலும், ரன் குவிக்கத் திணறியது. குறிப்பாக ஷாய் ஹோப் அதிரடியாக விளையாட சிரமப்பட்டார். ஆட்டத்தின் 9வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த ஷாய் ஹோப்பை போல்டாக்கி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டைப் பெற்றுத் தந்தார். 10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 82 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

IND vs WI Hetmyer and Daren Sammy Fuming Over Controversial DRS Decision Bumrah Rocks West Indies

சர்ச்சையை ஏற்படுத்திய டிஆர்எஸ் முடிவு

இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார். அப்போது ஆட்டத்தின் 12வது ஓவரை வீச வந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அந்த ஓவரில் பும்ரா ஷார்ட் லென்தில் வீசிய பந்தை ஹெட்மையர் சிக்ஸர் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டின் உள் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளில் தஞ்சமடைந்தது. இதற்கு கள நடுவர் கிறிஸ் கஃப்பனி அவுட் வழங்கினார்.

நடுவர் விரலை உயர்த்திய மறுகணமே ஹெட்மையர் டிஆர்எஸ் ரிவியூ கேட்டார். அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் பந்து பேட்டைக் கடக்கும் போது ஸ்பைக் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இதனால் டிவி நடுவரும் அவுட் வழங்கினார். ஆனால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையே இடைவெளி இருந்ததாகக் கூறி ஹெட்மையர் கடும் அதிருப்தி அடைந்தார். பந்து தனது பேட்டில் படவில்லை என்று சைகை செய்தபடியே அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பெவிலியனில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமியும் நடுவரின் இந்த முடிவால் கடும் கோபமடைந்தார். தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் கேமராவில் பதிவாகின. ஹெட்மையர் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 27 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பும்ராவின் இரட்டை வேட்டை

ஹெட்மையர் ஆட்டமிழந்த அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரோஸ்டன் சேஸையும் பும்ரா வெளியேற்றினார். பும்ரா வீசிய பவுன்சர் பந்தைச் சமாளிக்க முடியாமல் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த சேஸ், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்போர்டும் 14 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் பிடிபட்டு வெளியேறினார்.

இறுதிக்கட்ட அதிரடி

15 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்குச் சற்று தடுமாற்றமான நிலையில் இருந்தது. ஆனால், இறுதி கட்டத்தில் இணைந்த ரோவ்மன் பவல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

பவல் 19 பந்துகளில் 34 ரன்களும், ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் விக்கெட் ஏதுமின்றி 43 ரன்களையும், அக்சர் படேல் 35 ரன்களையும் வழங்கினர்.

Story first published: Sunday, March 1, 2026, 21:17 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+