IND vs WI: ட்விஸ்ட் வைத்த இந்தியா.. உடனடி டிக்ளேர் அறிவிப்பு.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி வாய்ப்பு
அகமதாபாத்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மேலும் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி 300 ரன்கள் கூட முன்னிலை பெறாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் துருவ் ஜுரல் மற்றும் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரல், 210 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரவீந்திர ஜடேஜா, 176 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களுக்கு முன்னதாக, கே.எல். ராகுல் 100 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தது இந்திய அணியின் ஸ்கோர் உயர முக்கியக் காரணமாக அமைந்தது.
வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 286 ரன்கள் பின்தங்கி உள்ளது. அந்த அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதால் 300 ரன்கள் கூட முன்னிலை பெறாத நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியால் 200 ரன்களை கூட தாண்ட முடியாது என்ற எண்ணம் இருந்தாலும், ஒருவேளை அந்த அணி நிலையாக பேட்டிங் செய்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்திய அணி 400 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்து இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்பது சில விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications