Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: “அவங்க 15 சிக்ஸ் அடிச்சா இந்தியா..”.. வெஸ்ட் இண்டீஸ்-ஐ சரமாரியாக விளாசிய ஸ்ரீகாந்த்

கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிக்குச் செல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பாணியில் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி பெறும் என்றும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

IND vs WI Kris Srikkanth Dismisses West Indies Chances Against India T20 World Cup 2026 Prediction

பந்துவீச ஆளே இல்லை

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிக்ஸர் அடிக்கக்கூடிய 6 பேட்டர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பந்துவீச யார் இருக்கிறார்கள்? வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் வீரர் இயன் பிஷப் தான் மீண்டும் வந்து பந்துவீச வேண்டும் போலிருக்கிறது.

ஷமார் ஜோசப் போன்ற பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் அடித்து நொறுக்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர்களிடம் வேகமும் இல்லை, பவுன்ஸும் இல்லை. பந்து ஸ்விங் ஆவதும் இல்லை. இந்திய பேட்டர்களுக்கு இவர்களை எதிர்கொள்வது மிகவும் எளிதான காரியம். அவர்களிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்" என்று விமர்சித்தார்.

மோசமான டாப் ஆர்டர்

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசையை விமர்சித்த அவர், "அவர்களுடைய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாகத் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் ரன் குவிக்கத் திணறி வருகின்றனர். அந்த அணியில் உருப்படியான ஒரே பேட்டர் சிம்ரான் ஹெட்மையர் மட்டும் தான். அவருக்கு இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவம் உள்ளது. மற்றபடி அவர்களின் பேட்டிங் வரிசை எப்போது வேண்டுமானாலும் சரிந்துவிழும் வகையிலேயே உள்ளது" என்று கூறினார்.

ஈஸியா ஜெயிக்கும் இந்தியா

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை ஒப்பிட்டுப் பேசிய அவர், "இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை விடப் பல மடங்கு வலிமையான அணி. இந்தப் போட்டியில் இந்தியா மிகச் சுலபமாக வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்று சதவீதத்தில் கூடச் சொல்லத் தேவையில்லை, அந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இந்தியா வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஒரே ஒரு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "கொல்கத்தா மைதானம் சிறியது மற்றும் தட்டையான ஆடுகளத்தைக் கொண்டது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் அல்லது குறைந்தது 200 முதல் 210 ரன்களாவது எடுத்தால் அவர்களுக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கலாம்.

ஏனென்றால் இந்த மைதானம் இரு அணிகளுக்குமே ரன் குவிக்கச் சாதகமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் 15 சிக்ஸர்கள் அடித்தால், இந்திய பேட்டர்கள் 18 சிக்ஸர்கள் அடித்து பதிலடி கொடுப்பார்கள்" என்று ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.

இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் தலா ஒரு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

Story first published: Sunday, March 1, 2026, 6:41 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+