டெல்லி: இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இருக்கின்றனர் என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் திறமை மற்றும் அனுபவத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் வேறு யாரும் இல்லை என்று கூறிய சுப்மன் கில், ஒவ்வொரு வீரரையும் பாதுகாப்பு உணர்வுடன் விளையாட வைப்பதே இலக்கு என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியை சீனியர் வீரரான ரோகித் சர்மா வென்று கொடுத்த போதும், பிசிசிஐ நிர்வாகிகள் சுப்மன் கில்லுக்கு பொறுப்பை கொடுத்துள்ளனர். ரோகித் சர்மாவை சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ரோகித் சர்மாவிடம் முறையாக ஆலோசனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக செய்தியாளர்களை சந்தித்து சுப்மன் கில் பேசுகையில், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களின் ரெக்கார்டை அவ்வளவு எளிதாக யாராலும் மேட்ச் செய்யவே முடியாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் திறமை, அனுபவம் ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
தற்போதைய சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியது. ஆனால் எனக்கு கொஞ்சம் முன்னதாகவே தெரியும். இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான ஒன்றுதான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்துவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே அதிக ஆர்வத்துடன் நாட்கள் செல்கிறது. அதேபோல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் காண ஆர்வமாக உள்ளேன். ஒரு அணியாக என்ன சாதிக்க போகிறோம் என்பதை காண வேண்டும். எதிர் வரும் அத்தனை போட்டிகளையும் நாங்கள் வெல்ல வேண்டும்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான நட்பு சிறப்பாக உள்ளது. இந்திய அணி வீரர்களை பாதுகாப்புடன் உணர வைப்பது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.