24 ஆண்டு கால வரலாற்றை முறியடிக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ்.. பெங்களூர் மழையால் தப்பிய இந்திய அணி
பெங்களூர்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி பெங்களூருவில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்திய மண்ணில் கடைசியாக கடந்த 2002-ல் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-3 எனக் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி இருந்தது. அதன்பின் 24 ஆண்டுகளாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்ற முடியாமல் இருந்தது வெஸ்ட் இண்டீஸ். அந்த வரலாற்று வாய்ப்பு இந்த டி20 தொடரில் ஓரளவு கைகூடி வந்தது. ஆனால், மழையின் காரணமாக அந்த வாய்ப்பு நழுவியது.
இந்த தொடரின் 4 போட்டிகளுமே அதிரடியின் உச்சமாக இருந்தது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அடித்த 171 ரன்களை இந்திய அணி எளிதில் சேஸ் செய்து தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் 2-வது போட்டியில் இந்தியா அடித்த 249 ரன்களை அசால்ட்டாக விரட்டிய வெஸ்ட் இண்டீஸ், 252 ரன்கள் குவித்து தொடரை சமன் செய்தது. தொடர்ந்து 3-வது போட்டியில் இந்தியா 223 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீஸை 209 ரன்களில் சுருட்டி இந்தியா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது.

ஹைதராபாத்தில் நடந்த 4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அதிவேகத்தில் ஆடி 247 ரன்களைக் குவித்தனர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 223 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் இந்த தொடரில் 260 ரன்களும், அதிரடி வீரர் ரூதர்போர்டு 221 ரன்களும் குவித்து மிரட்டினர். தட்டையான இந்திய ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய கரீபியன் வீரர்கள், தொடரை வெல்லும் நிலைக்கு சென்றனர்.
நான்கு போட்டிகளின் முடிவில் தொடரை 2-2 என சமன் செய்த வேகத்தோடு கடைசி போட்டியை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் தயாராக இருந்தது. அந்த அணியின் அதிரடி ஃபார்மைப் பார்க்கும்போது, 5-வது போட்டியிலும் வென்று 24 ஆண்டு கால தொடர் வெற்றிக் குறையைத் தீர்த்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் பெங்களூருவில் பெய்த கனமழை வெஸ்ட் இண்டீசின் வரலாற்று வெற்றியைத் தட்டிப் பறித்துவிட்டது. போட்டி ரத்தானதால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிரளிக்கப்பட்டாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நீண்ட காலக் காத்திருப்பு இன்னமும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications

