IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?
குவஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். முதல் போட்டியில் அபாரமாக சதம் அடித்து அசத்திய அவர் திடீரென விலகியிருப்பது, இந்த தொடரில் ஏற்கனவே 1-0 என பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போதே ஜஸ்டின் க்ரீவ்ஸுக்கு காலில் கெண்டைக்கால் தசைநார் காயம் ஏற்பட்டது.
களத்தில் ஓட முடியாமல் திணறிய அவர், பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் வலியையும் பொருட்படுத்தாமல் போராடி தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 108 பந்துகளில் 101 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். காயம் தீவிரமடைந்ததால் அவர் 2வது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய மைதானத்திற்கு வரவில்லை.

தற்போது அவரது காயம் இன்னும் குணமடையாததால், குவஹாட்டியில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து அவர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அக்டோபர் 3 அன்று நியூ சண்டிகரில் நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் 3வது அதிக ரன் குவித்த பேட்டராக ஜஸ்டின் க்ரீவ்ஸ் திகழ்கிறார். 19 இன்னிங்ஸ்களில் 528 ரன்கள் குவித்துள்ள அவர், தனது மிதவேகப் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி வந்த முக்கிய வீரர் விலகியிருப்பது விண்டீஸ் அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஜஸ்டின் க்ரீவ்ஸ் இல்லாததால், ஜான் கேம்ப்பெல்லுடன் இணைந்து தொடக்க வீரராக இளம் பேட்டர் ஜூவல் ஆண்ட்ரூ களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் விளையாடாத ஷெர்பேன் ரூதர்போர்ட் மீண்டும் அணிக்குத் திரும்பி மிடில் ஆர்டரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை இந்திய அணி 41.4 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, அக்டோபர் 6 முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. டி20 அணியில் க்ரீவ்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


