இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ODI வரலாற்றில் மாபெரும் ஸ்கோர் அடித்து சாதனை செய்த வெஸ்ட் இண்டீஸ்
குவஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அதிரடி ஆட்டம் ஆடி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். மேலும், ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி 400 ரன்களை எடுத்து பெரும் சாதனை படைத்தது.
குவஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளத்தின் தன்மையை சாதகமாக பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை பந்தாடினர். தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் வெறும் 68 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு எதிராக அதிவேக சதமடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் அமீர் ஜாங்கு இருவரும் இந்திய சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்களின் 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப் 182 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அசுர வேகத்தில் ஆடிய அமீர் ஜாங்கு 77 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 114 ரன்கள் குவித்து இந்திய அணியின் திட்டங்களை தவிடுபொடியாாக்கினார்.
வரலாற்றிலேயே முதல்முறை 400 ரன்கள்!
கடைசி கட்டத்தில் ரோஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 29 ரன்களும், ஷமர் ஜோசப் 14 ரன்களும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்கள்:
405/7 vs இந்தியா, குவஹாத்தி (2026)
389 vs இங்கிலாந்து, செயின்ட் ஜார்ஜ் (2019)
385/7 vs அயர்லாந்து, டப்ளின் (2025)
381/3 vs அயர்லாந்து, டப்ளின் (2019)
374/6 vs நெதர்லாந்து, ஹராரே (2023)
ரன்களை வாரி வழங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். குர்னூர் பிரார் 10 ஓவர்களில் 96 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஆகிப் நபி 8.5 ஓவர்களில் 84 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 75 ரன்களையும், குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 65 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 5 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications


