மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் சுமார் 14 ஆண்டு காலமாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை செய்து அசத்தியிருக்கிறது இந்திய மகளிர் அணி.
இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணமே மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்தான். அவர் இந்தப் போட்டியில் கடைசிவரை களத்தில் நின்று 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து, 339 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணி வெளியேற்றி இருக்கிறது.

கடந்த 2011 உலகக்கோப்பையில்தான் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியான காலிறுதியில் வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகிய இரண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளிலும் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
மறுபுறம், இந்திய மகளிர் அணியும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான புள்ளி விவரத்தையே வைத்து இருந்தது. 2025 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 60 போட்டிகளில் ஆடியிருந்த இந்திய மகளிர் அணி, அதில் வெறும் 11 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இதன் காரணமாக இந்திய அணி இந்த அரையிறுதிப் போட்டியில் வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றே பலரும் எண்ணினர். ஆனால், அந்த எண்ணத்திற்கு மாறாக, 339 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய மகளிர் அணி வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது. அடுத்தாடிய இந்திய மகளிர் அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலிருந்து வெற்றி பெறும் வரை நின்று ஆடினார். அவர் 127 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றி இலக்கை 48.3-வது ஓவரில் எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. நவம்பர் 2 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க மகளிர் அணியை சந்திக்கிறது.