IND-W vs ZIM-W: 96 பந்தில் சதம் அடித்த பிரதிகா.. ஜிம்பாப்வேயை துவம்சம் செய்த இந்திய மகளிர் அணி
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், 22.5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் சதம் விளாச, மற்றொரு அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா நாலாபுறமும் சிக்சர்களைப் பறக்கவிட, ஜிம்பாப்வே நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை இந்தியா வெறும் 27.1 ஓவர்களிலேயே மிக எளிதாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் பிலவ்ட் பிசா மட்டும் தாக்குப்பிடித்து ஆடி 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியை திணறடித்த ஸ்ரீ சரணி தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். அவருக்குத் துணையாக வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்து பலம் சேர்த்தனர்.

தொடர்ந்து 198 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் - கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து அபார தொடக்கம் கொடுத்தது. மந்தனா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய பிரதிகா ராவல், 96 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது இவரது 3-வது சதமாகும். இதன் மூலம் ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 3 சதங்கள் விளாசிய 2-வது இந்திய தொடக்க வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை இவர் படைத்தார்.
3-வது வரிசையில் களமிறங்கிய துணை கேப்டன் ஷஃபாலி வர்மா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 29 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 70 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தது. இந்தியா 27.1 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications

