IND W vs ZIM W: ஷபாலி வர்மா புதிய உலக சாதனை.. ஸ்மிருதி மந்தனா ரெக்கார்ட் முறியடிப்பு
மும்பை: மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ராய்ப்பூரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 போட்டியில், அவர் 26 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
ஜிம்பாப்வே தொடரில் ஷஃபாலி வர்மா அடிக்கும் தொடர்ச்சியான இரண்டாவது அரைசதம் இதுவாகும். மேலும், 2026 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் பதிவு செய்யும் 9-வது அரைசதமாகவும் இது அமைந்தது. இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2024-இல் 8 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஷஃபாலி வர்மா அவரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். 2026 ஆம் ஆண்டில் இதுவரை 27 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி, ஒரு சதமும் 9 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
ஷஃபாலி வர்மா 2026 ஆம் ஆண்டில் 27 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 991 ரன்கள் குவித்துள்ளார். இதில் இவரது அதிகபட்ச ரன் 100* ஆகும். இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2024-இல் 23 போட்டிகளில் 8 அரைசதங்களுடன் 763 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இப்பட்டியலில் இந்தியாவின் மிதாலி ராஜ் 2018-இல் 22 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஹாங்காங்கின் நடாஷா மைல்ஸ் 2026-இல் 27 போட்டிகளில் 1 சதம் மற்றும் 6 அரைசதங்களுடன். ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 2018-இல் 17 போட்டிகளில் 6 அரைசதங்களுடன், மற்றும் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 2020-இல் 14 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்திய அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷஃபாலி வர்மா, தாம் விளையாடிய கடைசி 5 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விளாசி அபார ஃபார்மில் உள்ளார்.


Click it and Unblock the Notifications


