உலகில் எந்த அணியும் செய்யல.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி
டெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் 10 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் Full member team என்ற வரலாற்று சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இந்த சாதனையை எட்டியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதுவரை Associate Nation member ஆன கனடா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 10 முறை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முழுநேர உறுப்பினர் நாடுகளைப் பொருத்தவரை, இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வே 8 வெற்றிகளுடனும், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தலா 6 வெற்றிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் பட்டியலில், கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தலா 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரியா அணி 9 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஜிம்பாப்வே, நேபாளம், ஜப்பான், மலேசியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் தலா 8 வெற்றிகளையும், ஸ்பெயின், தான்சானியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன. பப்புவா நியூ கினியா அணி 5 வெற்றிகளுடன் இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, இவர்களது ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தது.
அதிவேகமாக ரன் குவித்த அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மாவை ரன் அவுட் செய்த ரஷீத் கான், சாம்சன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதி கட்டத்தில் இந்தியா சில விக்கெட்டுகளை இழந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயரின் 29 ரன்கள் பங்களிப்பால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
222 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் முதல் ஓவரில் சில பவுண்டரிகளை அடித்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய அந்த அணி 94 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications


