உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு கிர்ஸ்டன் விலகலா?

கிர்ஸ்டன் பயிற்சியாளராக வந்தபிறகு இந்திய கிரிக்கெட் அணி சரமாரியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு கிர்ஸ்டன் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. ஆனால் அவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணிக்கு விடை கொடுக்கவுள்ளதாக தற்போது பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து கேப்டன் டோணி கூறுகையில், கிர்ஸ்டன் பயிற்சியாளராக நீடிப்பது குறித்து இப்போதைக்கு யாரும் பேசவில்லை. அதுகுறித்த பேச்சும் எழவில்லை. எங்களது இப்போதைய (வீரர்களின்) கவனம் முழுவதும் தென் ஆப்பிரிக்க தொடரை வெல்வதில்தான் உள்ளது. உரிய நேரம் வரும்போது பேசுவோம்.
தென் ஆப்பிரிக்கத் தொடர் முடிந்த பிறகு உலகக் கோப்பைப் போட்டி வருகிறது. அதுவரை அவர் எங்களுடன் இருப்பார் என்று கருதுகிறோம். அவரது கான்டிராக்டும் உலகக் கோப்பை வரை இருக்கிறது.
அதற்குள் அவரிடமிருந்து என்னவெல்லாம் கற்க முடியுமோ அதை செய்ய முயற்சிப்போம். அதேசமயம், இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவர் எங்களுடன் இருந்தால் மகிழ்ச்சியே.
இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த மிகச் சிறந்த பயிற்சியாளர் கிர்ஸ்டன். அதில் எங்களுக்கு பெரும் மகி்ழ்ச்சி. மிகப் பெரிய வீரர் அவர். மீடியாக்களிடம் பேசுவதை விட அணிக்கு பயனுள்ளது குறித்த சிந்தனையே அவரிடம் அதிகம் உள்ளது. தனது வேலையில் அவர் மிகச் சரியாக, சீரிஸயாக இருக்கிறார். இதுவே அவரிடம் எங்களைக் கவர்ந்த முக்கிய விஷயம் என்றார் டோணி.
2007-08 ஆஸ்திரேலியத் தொடரில் இந்தியா பெருத்த கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருந்தநிலையில், கிர்ஸ்டன் இந்திய அணியுடன் இணைந்தார். அவரது காலத்தில்தான் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. பல வெற்றிகளையும் குவித்தது. இந்திய வீரர்களின் பிளஸ், மைனஸை சரியாக புரிந்து வைத்து அவர்களை சரிப்படுத்தி திறமைகளை முழுமையான அளவில் வெளிக் கொணருவதில் கிர்ஸ்டன்பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிர்ஸ்டன் விலகினால் அது இந்திய வீரர்களுக்கு நிச்சயம் பெரிய இழப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications