சண்டிகர்: 50 ஓவர் ஒருநாள் போட்டிகளின் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற டெண்டுல்கரின் யோசனையை முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டின் தன்மையை மாற்ற முயற்சிப்பது அந்த விளையாட்டையே பாதிக்கும் என்றார் கபில்.
டி20 எனும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஐசிஎல் போட்டிகள் எனும் பெயரில் முதலில் அறிமுகப்படுத்தியவர் கபில்தேவ்தான்.
இதற்குப் போட்டியாகத்தான் பிசிசிஐ ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளை அறிமுகம் செய்து, இன்று பணம் கொழிக்கும் வர்த்தக நிகழ்வாகவே அதை மாற்றிவிட்டது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் போட்டியால் ஒருநாள் ஆட்டம், டெஸ்ட் ஆகிய இரண்டுமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒருநாள் போட்டியை மேலும் விறுவிறுப்பாக மாற்ற சமீபத்தில் யோசனை ஒன்றை தெரிவித்து இருந்தார் சச்சின் தெண்டுல்கர்.
மொத்தம் உள்ள 100 ஓவரை 25 ஓவராக பிரித்து தலா இரண்டு அணிகளும் 2 இன்னிங்ஸ் ஆடலாம் என்றார். இலங்கையுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டு முழு நாட்கள் விளையாடியும் மழை காரணமாக முடிவு தெரியாமல் போனதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தக் கருத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.
இந்நிலையில் டெண்டுல்கரின் கருத்து ஆபத்தானது என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
அவர் கூறுகையில், 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் ஆகியவற்றுக்கு தனித்தனி மதிப்பு இருக்கிறது. அவற்றை மாற்றி அமைத்து அதன் தன்மையை குறைக்கக் கூடாது. இதனால் கிரிக்கெட் பாரம்பரியமே கெட்டு விடும். அந்த விளையாட்டுக்கே ஆபத்தாக முடியும்.
அதேநேரம் மாற்று யோசனைகள் தொடர்ந்து வெளியாவதை வரவேற்கிறேன். நல்லது கெட்டதைப் புரிந்து அந்தக் கருத்துக்களை ஏற்க வேண்டும், என்றார்.