மும்பை: இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி, ஜாக்கஸ் காலிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை 85 ரன்களுக்கு சுருட்டி வீழ்த்தியது இந்திய ஜாம்பவான்கள் படை. குறிப்பாக ராகுல் சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். யுவராஜ் சிங் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதோடு மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி 13.5 ஓவர்களில் 85 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஹென்றி டேவிட்ஸ் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவர் 28 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.
அவருக்கு அடுத்ததாக டேன் விலாஸ் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரண்டு இலக்க ரன்களை எட்டவில்லை. ஜாக்கஸ் காலிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். ராகுல் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தார். யுவராஜ் சிங் டேன் விலாஸ், க்ரூகர் மற்றும் ஃபிலாண்டர் விக்கெட்களையும் வீழ்த்தினார். பவன் நேகி மற்றும் ஸ்டுவர்ட் பின்னி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து இந்தியா மாஸ்டர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது அம்பத்தி ராயுடு அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இர்பான் பதான் மூன்றாம் வரிசையில் இறங்கி 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பவன் நேகி நான்காம் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 12 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
இதை அடுத்து இந்தியா மாஸ்டர்ஸ் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி இருந்தது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னதாக இந்த தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தியுள்ளது. அடுத்ததாக மார்ச் 5 அன்று ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.