மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை என்ற காரணத்தினால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். இந்த நிலையில் ரோகித் சர்மா தான் தற்போது இந்திய அணியின் மூன்று கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக தலைமை தாங்கி வருகிறார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய கேப்டன்சி நேர் மாறாக இருக்கிறது. ரோகித் சர்மா தற்போது டெஸ்டில் பேட்ஸ்மேனாகவே தடுமாறி வருகிறார். விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது ஒட்டு மொத்த அணியுமே ஆக்ரோஷமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய டெஸ்ட் அணி விக்கெட்டுகளை எடுக்கவே தடுமாறுவதாக குறை எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டில் மட்டும் இந்திய அணி 14 போட்டிகளில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்திய அணி உள்நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளையுமே வெல்ல வேண்டும். ஏற்கனவே ரோகித் சர்மா ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருப்பதால் அவருக்கு பதிலாக விராட் கோலியை டெஸ்ட் அணியின் கேப்டனாக திரும்ப வேண்டும் என பிசிசிஐ யோசித்தது.
ஆனால் இதற்கு விராட் கோலி ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தாம் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேப்டன் பதவி தமக்கு வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாகவும் அவர் கூறிவிட்டார். இதனால் ரோஹித் சர்மாவையே வைத்து போட்டிகளை நகர்த்தலாமா இல்லை கே எல் ராகுல் போன்ற புதிய கேப்டனை கொண்டு வரலாமா என்ற யோசனையில் பிசிசிஐ இருக்கிறது. இதனால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் ஆகிய போட்டியில் ரோகித் சர்மா எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து அவருடைய டெஸ்ட் கேப்டன்சி பதவி இருக்கும்.