117 ரன்களில் சுருண்ட இந்தியா.. ஆஸி.க்கு எதிராக வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோர்.. ஸ்டார்க் அபாரம்
விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு சுருண்டது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது நாள் ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. இதற்கு காரணம் மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவியது.
இந்தியாவுக்கு ராசியான இந்த மைதானத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு பேட்ஸ்மேன்கள் விருந்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது மறக்க வேண்டிய விடுமுறையாக மாறிவிட்டது.

2 டக் அவுட்
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சுப்மன் கில், ரோகித் சர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில் கவனக்குறைவாக தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி டக் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்தாலும் அவரும் 13 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. இதே போன்று சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் டக் ஆனார்.

சரிந்த விக்கெட்
இதனால் 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் அடித்த கேஎல் ராகுல், இம்முறை 5 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா வெறும் 3 பந்துகளை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் நடையை கட்டினார். இதனால் தற்போது இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

கோலியும் அவுட்
இதனையடுத்து, விராட் கோலியும் , ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தனர். கோலி 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜாவும் 16 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி மிக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழப்பது உறுதியாகிவிட்டது.

117 ரன்களில் ஆல்அவுட்
எனினும் அக்சர் பட்டேல் தனியாக ஆளாக நின்று போராடி இந்திய அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட முயன்றார். இதனால் ஸ்டார்க் பந்தில் கூட தொடர்ந்து 2 சிக்சர் விளாசினார். ஆனால் எதிர்முனையில் யாரும் துணை நிற்காததால் இந்திய அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். மிட்செல் ஸ்டார்க் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.


Click it and Unblock the Notifications