ஹர்திக் வெறித்தன ஆட்டம்.. கோலியின் அபார அரைசதம்.. 169 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்ற அணி வென்றதே இல்லை என்ற ஒரு சாபம் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக 180 ரன்களை எடுத்தால் மட்டுமே இந்திய அணிக்கு ஒரு அளவாவது வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதால் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவும், ராகுலும் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தனர்.

ராகுல் ஏமாற்றம்
இங்கிலாந்து அணியில் மார்க் வுட், டேவிட் மாலன் ஆகியோர் இல்லை. இதனையடுத்து, ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தார். இதனால், ராகுல் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல், ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.

ரோகித் அவுட்
இதனை அடுத்து, அனைத்து அழுத்தமும், நெருக்கடியும் கோலி, ரோகித் மீது விழுந்தது. கோலி வழக்கம் போல் அடித்து ஆட முற்பட்டார். ஒரு கட்டத்தில் அமைதியாக இருந்த ரோகித் சர்மா, பிறகு அதிரடியாக ஆட முயற்சி செய்தார். இதற்கு பலனாக தொடர்ந்து பவுண்டரிகள் எல்லாம் கிடைத்தது. மறு பக்கம், கிறிஸ் வொக்ஸ் பந்துவீச்சில் கோலி கவர் டிரைவில் சிக்சர் அடித்தார். இதனைத் தொடர்ந்த தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்கும் விதமாக ரோகித் சர்மா தூக்கி அடிக்க, அது கேட்ச் ஆனது.

கோலி அரைசதம்
இதனையடுத்து 28 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முற்பட்டு 14 ரன்களில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து விராட் கோலி அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் அரைசதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, ஒரே ஓவரில் 2 சிக்சர் விளாசினார்.

ஹர்திக் அதிரடி
இதே போன்று ஆட்டத்தின் 19வது ஓவரில் இந்திய அணி 20 ரன்களை விளாசியது. அந்த ஆட்டத்தின் கடைசி பந்தில், பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சை விட்டது, திருப்புமுனையாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா 29 பந்தில் அரைசதம் கடந்தார். இதே போன்று கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்தாலும் ஹர்திக் பாண்டியா ஹிட் விக்கெட் ஆக்கி வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் இந்திய அணி 68 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications