டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது.
அயர்லாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தால், இந்திய அணி தொடரை கைப்பற்றும். இதனால் அயர்லாந்து அணி தரப்பில் கடுமையான சவால் அளிக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கியது. இதில் தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன்பின் ருதுராஜ் - சஞ்சு சாம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ருதுராஜ் சில பவுண்டரிகளை விளாசிவிட்டு சஞ்சு சாம்சனிடம் பேட்டிங்கை கொடுக்க, சஞ்சு சாம்சன் அதிரடியில் வெளுத்து கட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய அவர் 26 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் அதிரடியாக சிக்சர் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், 43 பந்துகளில் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் சிக்சர் புகழ் ரிங்கு சிங் - சிவம் துபே கூட்டணியிடம் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. 18 ஓவர்கள் வரை இருவரும் விக்கெட் கொடுக்காமல் அமைதி காத்தனர்.
இதன்பின்னர் 19வது ஓவரில் ரிங்கு சிங் தனது வேலையை காட்ட தொடங்கினார். அந்த ஓவரில் இரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் கடைசி ஓவரில் சிவம் துபே தன் பங்கிற்கு முதல் இரு பந்துகளில் இரு சிக்சர்களை விளாச, தொடர்ந்து வந்த ரிங்கு சிங்கும் இன்னொரு சிக்சரை விளாசினார். பின்னர் கடைசி ஓவரில் 5வது பந்தில் ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சிவம் துபே 16 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபேவை பாராட்டி வருகின்றனர்.