மொஹாலி: இந்திய அணிக்காக சிவம் துபே பவுலிங் செய்வதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் 3 ஓவர்களை ஒதுக்கிவிடுவார் என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்தவர் சிவம் துபே. ஸ்பின்னர்களை அட்டாக்கில் இருந்து வெளியேற்றும் வல்லமை கொண்ட சிவம் துபே, இமாலய சிக்சர்களை விளாச கூடியவர். அசால்ட்டாக 100 மீட்டர்கள் தூரம் சிக்சர் அடிக்கும் சிவம் துபே, கடந்த சீசனில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 418 ரன்களை விளாசினார்.

இதன் காரணமாக இந்திய அணியிலும் சிவம் துபேவால் கம்பேக் கொடுக்க முடிந்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்த சிவம் துபே, ஃபினிஷிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு சிவம் துபே தேர்வு செய்யப்பட்டார்.
நட்சத்திர இளம் வீரர்கள் இருக்கும் போது சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அவரை 3வது வேகப்பந்துவீச்சாளராக பார்த்தார். இதனால் முதல் டி20 போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பவுலிங் செய்த சிவம் துபே 2 ஓவர்களில் 9 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங்கில் கடைசி வரை களத்தில் இருந்து 40 பந்துகளில் 60 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். சிவம் துபே ஆல்ரவுண்டராக முன்னேற்றம் கண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கு பின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் சிவம் துபே தொலைக்காட்சியில் பேசினார்.

அப்போது சுரேஷ் ரெய்னா, இந்த போட்டியை சிஎஸ்கே கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக 3 ஒவ்வொரு போட்டியிலும் 3 ஓவர்கள் உனக்கு தான் என்று கூறினார். அதற்கு சிவம் துபே, தோனி.. சுரேஷ் ரெய்னா சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் என்று சிரித்து கொண்டே கூறினார். இந்த உரையாடல் சிஎஸ்கே வீரர்களுக்கே உரிய கேலியும், கிண்டலுடனும் அமைந்தது.
கடந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சிவம் துபேவுக்கு ஒருமுறை கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. அதன்பின் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட தொடர்களில் சிவம் துபே பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டதன் விளைவே தற்போது விக்கெட் வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.