கடைசி ஓவரில் 36 ரன்கள்.. மொத்தமாக 14 சிக்ஸ்.. ரோகித் சர்மா - ரிங்கு விஸ்வரூபம்.. இதுதான் கம்பேக்!
பெங்களூரு: ஆஃப்கானிஸ்தான அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா அதிரடி சதம் விளாசியதன் காரணமாக இந்திய அணி 212 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ்மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து வழக்கம் போல் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 2 ஓவர்களில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 3வது ஓவரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த விராட் கோலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட்டாகி வெளியேற, பெங்களூரு மைதான ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து நின்றனர்.
பின்னர் வந்த துபே 1 ரன்னிலும், சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகியும் வெளியேற, இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ரோகித் சர்மா - ரிங்கு சிங் இருவருமே நிதான ஆட்டத்தை விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் சேர்த்தது.
இதன்பின்னர் 7வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரோகித் சர்மா கியரை மாற்றினார். இவருக்கு உறுதுணையாக ரிங்கு சிங் சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 61ஆக இருந்தது. பின்னர் ரோகித் சர்மா அதிரடியாக பவுண்டரிகளை விளாசி 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதையடுத்து இரு வீரர்களுமே அதிரடியில் பொளந்து கட்டினர். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸ் என்று பறந்து கொண்டே இருந்தது. அதிலும் 16வது ஓவரில் மட்டும் 22 ரன்கள் சேர்க்கப்பட்டன. 5வது விக்கெட்டுக்கு ஒவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 ஃபோர்ஸ் அடித்து டி20 கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். பின்னர் ரிங்கு சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்.
19 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 36 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 8 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 121 ரன்களும், ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 சிக்ஸ் உட்பட 69 ரன்களையும் விளாசினர்.


Click it and Unblock the Notifications