மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டு அவரது இடத்தில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடரை எளிதாக 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனிடையே 3வது போட்டிக்கு பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியும் காயம் காரணமாக அக்சர் படேல் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் போது, அக்சர் படேல் டி20 அணியில் இடத்தை பறிகொடுத்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4வது மற்றும் 5வது டி20 போட்டியில் அபாரமாக செயல்பட்ட அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். அதன்பின் அணித் தேர்வை பற்றி கவலையில்லை என்று நம்பிக்கையுடன் பேசி பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபவ வீரரான ஜடேஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் என்று 4 ஸ்பின்னர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவை விடவும் அக்சர் படேல் நல்ல பேட்ஸ்மேன் என்று கூறலாம். ஏனென்றால் ஜடேஜாவை விடவும் அக்சர் படேலிடம் அதிகளவிலான ஷாட்ஸ் மற்றும் பவர் ஹிட்டிங் திறமை உள்ளது. எந்த திசையில் பந்து வந்தாலும் சிக்சரை விளாசும் வகையில் பேட்டிங்கில் முன்னேற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.