பெங்களூரு: வரும் போட்டிகளில் எனது பவுலிங்கில் முன்னேற்றம் காண விரும்புவதாக இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கும், பிசிசிஐ-க்கும் பல்வேறு கதவுகளை திறந்துவிட்டுள்ளது. ஏனென்றால் 14 மாதங்களுக்கு பின் டி20 அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் அதே தீவிரத்தன்மையுடன் பேட்டிங் செய்கின்றனர். ஃபினிஷிங்கில் ரிங்கு சிங்கும் அதிரடி, ஆஃப் ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தரின் எழுச்சி, அக்சர் படேலின் விக்கெட் வீழ்த்தும் திறன் என்று பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன் மூலமாக அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, சாஹல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாமல் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரராக சிவம் துபே இருப்பார் என்ற நம்பிக்கையை உருவாகியுள்ளது. ஸ்பின்னர்களை வெளுக்கும் சிவம் துபே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மைதானங்களில் இந்திய அணியின் முக்கியமான வீரராக உருவாகியுள்ளார்.
இந்த டி20 தொடரில் 2 அரைசதம் உட்பட 124 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிவம் துபே தொடர் விருதை வென்றார். இதுகுறித்து சிவம் துபே பேசுகையில், ஒரு ஆல்ரவுண்டராக தொடர் நாயகன் விருதை அதிக வெல்ல வேண்டும். என் வாழ்க்கையில் முதல்முறையாக தொடர் நாயகன் விருதை வென்று சாதனை செய்திருக்கிறேன். இது மனதளவில் நல்ல உணர்வை அளிக்கிறது. இதே மைதானத்தில் ஏராளமான ரன்களை குவித்துள்ளோம். இன்றைய போட்டியை பொறுத்தவரை சூப்பர் ஓவருக்கு முன்பாகவே வெல்வோம் என்று நினைத்தோம்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுதான் கிரிக்கெட். இரு அணிகளும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதேபோல் எனது ஆட்டத்தில் இன்னும் ஏராளமானவற்றில் முன்னேற்றம் காண வேண்டும் என்று தெரிந்து கொண்டுள்ளேன். குறிப்பாக எனது பவுலிங்கில் அதிக முன்னேற்ற காண வேண்டும். அடுத்தடுத்து விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிவம் துபேவுக்கு சிஎஸ்கே அணி தரப்பில் பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், இம்முறை பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.