இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணியின் ஃபரூக்கியை அதிவிரைவாக ஓடி சென்று இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய குல்புதீன் நைப் 35 பந்துகளில் 4 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 57 ரன்கள் விளாசினார்.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னாய் மற்றும் அக்சர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் 172 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
இதனிடையே ஆட்டத்தின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் நூர் அஹ்மத் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்து ஒய்டாக மாறியது. அதனால் ஒரு ரன் சேர்க்க முஜீப் உர் ரஹ்மான் முயன்ற போது, ஜித்தேஷ் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் கடைசி பந்தை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த பந்தை ஃபசல்ஹக் ஃபரூக்கி எதிர்கொண்டார்.
அந்த பந்தை நவீன் உல் ஹக் பேட்டில் பட்டுபோது, ஒரு ரன் எடுக்கப்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ரன் அவுட்டை மிஸ் செய்ய, அது எதிர்முனையில் நின்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் கைகளுக்கு சென்றது. அப்போதும் நவீன் உல் ஹக் 2வது ரன்னுக்கு ஓடி வர, மறுமுனையில் ஃபரூக்கி தாமதமாக ஓட தொடங்கினார்.
இன்னொரு பக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரை ரன் அவுட் செய்ய நேராக ஸ்டம்பை நோக்கி ஓடினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஓட்டப்பந்தயம் நடப்பது போல் காட்சிகள் மாறின. இறுதியாக ஜெய்ஸ்வால் ஃபரூக்கியை ரன் அவுட் செய்து அசத்தினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.