IND vs AUS: நானே சோகத்துல இருக்கேன்.. இதுலாம் எதுக்கு.. விருது வாங்கிவிட்டு பேச தவிர்த்த விராட் கோலி
அகமதாபாத்: உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்கலங்கி நின்றனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றிபெற்றோருக்கு வாழ்த்துவிட்டு கலங்கிய கண்களுடன் முதல் நபராக ஓய்வறை நோக்கி ஓடினார்.

அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மைதானத்தில் கதறி அழுது கண்ணீர் விட, அவரை தேற்ற முடியாமல் பும்ரா, கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் ஆறுதல் கூறினர். இதுஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கலங்கிய கண்கள் கேமராவில் தெரிய வேண்டாம் என்று தொப்பியை கொண்டு முகத்தை மூடிக் கொண்டு ஓய்வறைக்கு சென்றார்.
தொடர்ந்து விரக்தியில் இருந்த இந்திய அணி வீரர்களை தேற்ற முடியாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திணறி போனார். இதன்பின் பரிசளிப்பு விழாவிற்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் வந்து ஆறுதல் கூறினார். ஆனால் இந்திய அணி வீரர்களிடம் இருந்து சோகத்தை அகற்ற முடியவில்லை.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள், 6 அரைசதங்கள் என்று மொத்தமாக 765 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதனை கலங்கிய கண்களுடன் மேடையில் வாங்கிய விராட் கோலி, எந்த கருத்தும் சொல்லாமல் உடனடியாக வெளியேறினார். தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தொடர் நாயகன் விருதை பெற்றுக் கொண்ட விராட் கோலியை எதிர்பார்த்து ரவி சாஸ்திரி கேள்விகளை கேட்க தயாரான நிலையில், நேரடியாக கைகளை காட்டி பேசும் மனநிலையில் இல்லை என்று சிக்னல் கொடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ரவி சாஸ்திரி, விராட் கோலியை பற்றி எதுவும் பேசாமல் அடுத்த விருதுக்கான வீரரை அறிவித்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications