பெங்களூரு: இந்திய அணியின் இளம் வீரரான ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பிங்கில் பறவை போல் பறந்து பறந்து பந்தை பிடிப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தார். அதிலும் மும்பை மண்ணில் அந்த அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. 27 பந்துகளை எதிர்கொண்ட ஜித்தேஷ் சர்மா, 49 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும், அவ்வளவு எளிதாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியிலேயே அதிரடியாக சிக்சர், பவுண்டரி என்று விளாசிய அவர், 19 பந்துகளில் 35 ரன்களை விளாசி தள்ளினார்.
இதன்பின் மீண்டும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா, ஃபினிஷர் ரோலில் களமிறங்கி ஸ்ரேயாஸ் ஐயருக்கு உறுதுணையாக நின்று 16 பந்துகளில் 24 ரன்களை விளாசினார். இதன்பின் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் - பிலிப் கூட்டணி களமிறங்கியது.
அதில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வந்த நிலையில் ஆவேஷ் கான் அவரின் கால்களை நோக்கி தரமான யார்க்கரை இறக்கினார். அந்த பந்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார் டிராவிஸ் ஹெட். அந்த பந்து அவரின் கால்களுக்கு நடுவில் பட்டு, லெக் சைட் திசையில் திரும்பியது. இதனை கணித்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா, பறவை போல் பறந்து சென்று தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஒரு நிமிடம் இந்திய வீரர்களே அசந்து போய் நின்றனர். இதையடுத்து அருகில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் அவரை களத்திலேயே பாராட்டினர். ஏற்கனவே தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா சிறப்பாக செயல்படுவதால், இனி இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்படுகிறது.