அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற இந்திய அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. இதில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா அதிரடியை தொடர்ந்தார். ரோகித் சர்மாவின் அதிரடியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்லை அட்டாக்கில் கொண்டு வந்தார். இந்த சிறப்பாக சிறப்பாக ஆடிய வந்த ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் இணைந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானம் என்பதை காட்டிலும், விக்கெட் கொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். இதனிடையே இந்திய அணி 97 பந்துகளாக பவுண்டரியே அடிக்காமல் ரன்கள் சேர்த்து வந்தது. இருப்பினும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் விராட் கோலி 54 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழக்க, மொத்த பொறுப்பும் கேஎல் ராகுல் கைகளுக்கு வந்தது. அவரும் அமைதியின் உருவமாக ஆடி 86 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த முகமது ஷமி 6 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவிக்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்ததால், குறைந்தபட்சம் 250 ரன்களாவது இந்திய அணி எட்டும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் ஹேசல்வுட் வீசிய ஸ்லோயர் பந்தில் அவரின் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் - சிராஜ் இருவரும் சில ரன்களை சேர்த்ததன் விளைவாக இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி கடைசி 40 ஓவர்களில் 4 பவுண்டரியை மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.