பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக பிரிஸ்பேனில் நடந்த வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா புதிய பந்தில் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த முறை காபா மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், இம்முறை மீண்டும் வெல்வதற்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேட்டிங் வரிசையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பெர்த் டெஸ்டில் இந்திய அணி பெற்ற வெற்றி காரணமாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக விளையாடி வந்தது. இதனால் வேறு வழியின்றி ரோஹித் சர்மா நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். ஆனால் நம்பர் 6ல் களமிறங்கி அவர் வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்ததால், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொந்தளித்தார்.
6 ஆண்டுகளாக தொடக்க வீரராக விளையாடி வந்த ரோஹித் சர்மாவை மிக சாதாரணமாக மிடில் ஆர்டருக்கு தள்ளிவிட்டார்கள் என்று விமர்சித்திருந்தார். அதேபோல் காபா மைதானத்தில் கடந்த முறை ரோஹித் சர்மா களமிறங்கிய போது, 44 மற்றும் 7 ரன்களை சேர்த்துள்ளார். காபா மைதானத்தில் இருக்கும் பவுன்ஸை எதிர்த்து ரோஹித் சர்மாவுக்கு விளையாடிய அனுபவம் உள்ளது.
இதனால் இந்திய அணி இம்முறை பழைய பேட்டிங் ஆர்டரில் வீரர்களை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராகவும், கேஎல் ராகுலை நம்பர் 6 வீரராகவும் களமிறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பிரிஸ்பேனில் நடைபெற்ற வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா புதிய பந்தில் பயிற்சியை மேற்கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி பவுலர்களான ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவரையும் புதிய பந்தில் பவுலிங் செய்ய வைத்து ரோஹித் சர்மா பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அதேபோல் கேப்டனாகவும் ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருப்பதால், இம்முறை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க பல்வேறு திட்டங்களை தயார் செய்து வருகிறார்.
அதேபோல் கடினமான சூழல்களில் ரோஹித் சர்மா களமிறங்கி ஏராளமான முறை காப்பாற்றி இருக்கிறார். தற்போது ரோஹித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவரிடம் இருந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் காபா மைதானத்தில் வெளிப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.