அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இல்லாததன் விளைவை இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு அதிர்ச்சியை இந்திய அணி கண்டுள்ளது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணி, மீண்டும் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியை போலவே தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று ஒட்டுமொத்தமாக சொதப்பியது என்றே சொல்லலாம். ஏனென்றால் அகமதாபாத் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானத்தில் 240 ரன்கள் என்பது குறைந்தபட்ச ஸ்கோர் தான். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய சூர்யகுமார் யாதவும் பொறுப்பின்றி டெய்லண்டர்களின் விக்கெட்டை பறிகொடுத்து, தானும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதேபோல் அஸ்வினை களமிறக்க முடியாததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேனான அஸ்வினை தொடக்கத்திலேயே அட்டாக்கில் கொண்டு வந்திருக்கலாம் என்பதோடு, இடதுகை பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட்டையும் வீழ்த்தியிருக்க முடியும்.
உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி தவித்தது. ஏனென்றால் 3வது வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 6வது பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர் என்று 3 ரோலையும் ஹர்திக் பாண்டியா நிரப்பி வந்தார். ஏற்கனவே டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டாப் ஆர்டர் சொதப்பிய போது, விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்.
அதேபோல் பவுண்டரிகள் அடிக்க முடியாத நேரத்தில், அசாத்திய சிக்சர்களை விளாசக் கூடிய பேட்ஸ்மேன். சிராஜ் ஃபார்மில் இல்லாததால் அவரை கொஞ்சம் தாமதமாக அட்டாக்கில் கொண்டு வருவதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவுடன் இந்திய அணி களமிறங்கி இருக்க முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா இருந்திருந்தால், இந்திய அணி கொஞ்சம் கூடுதல் ரன்களையும் சேர்த்திருக்க முடியும். அதேபோல் அகமதாபாத் மைதானத்தின் அத்தனையும் அவருக்கு அத்துபடி என்பது குறிப்பிடத்தக்கது.