வரலாறு மாறுது.. அன்று கங்குலி செய்த தவறு.. 20 ஆண்டுகளுக்கு பின் அதே தவறை செய்த பேட் கம்மின்ஸ்!
அகமதாபாத்: 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி செய்த தவறை, தற்போது ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்துள்ளார்.
2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது எதிர்முனையில் நின்றிருந்த ரிக்கி பாண்டிங் முதல் பேட்டிங் ஆடுவதில் எங்களுக்கு எந்த சிரமும் இல்லை என்று கூறி அப்போது மவுனமாக சிரித்தார். அதன்பின் அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தில் இந்திய அணியே கதி கலங்கி நின்றது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்று, உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணி அடைந்த தோல்விக்கு டாஸின் போது கங்குலி எடுத்த தவறான முடிவே முதல் காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்று எப்படி ரிக்கி பாண்டிங் பதில் கூறினாரோ, அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று, முதல் பேட்டிங் ஆடுவது எங்களின் திட்டம் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் இந்த முடிவு தவறானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தின் இந்த பிட்ச் நேரம் செல்ல செல்ல, ஸ்லோவாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் பேட்டிங் செய்வதே சரியானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றிபெற 312 ரன்கள் எடுக்க வேண்டும் என்றும், சராசரியாக 278 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.
இதனால் இந்தியா அணி உலகக்கோப்பையை கைப்பற்றினால், ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு பேட் கம்மின்ஸ் டாஸின் போது எடுத்த முடிவே முக்கிய காரணமாக அமையும். மேலும், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி அதேபோல் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Story first published: Sunday, November 19, 2023, 14:39 [IST]
Other articles published on Nov 19, 2023


Click it and Unblock the Notifications