IND vs AUS: ஏன்யா ரோகித் இவ்ளோ அவசரம்.. இது 5வது முறை.. கங்காரு வலையில் சிக்கிய இந்திய வீரர்கள்!
அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5வது முறையாக அரைசதத்தை தவறவிட்டு வெளியேறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் அடக்கி வாசித்த ரோகித் சர்மா, 2வது ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசி அட்டாக்கை தொடங்கினார். ஒருபக்கம் ரோகித் சர்மா பவுண்டரி, சிக்சராக விளாச, இன்னொரு பக்கம் சுப்மன் கில்லுக்கு ஆட்டமே எடுக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரிலேயே விராட் கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாச, தொடர்ந்து ரோகித் சர்மா மறுமுனையில் அதிரடியை தொடர்ந்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 66 ரன்களாக இருந்தது.
அப்போது 10வது ஓவரை மேக்ஸ்வெல் வீச, பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி ரோகித் சர்மா அசத்தினார். ஆனால் "Nervous 40"க்கும் ரோகித் சர்மா இருந்ததால், ரசிகர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலேயே 10 ரன்கள் சேர்த்தும், அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து ரோகித் சர்மா டவுன் தி டிராக் இறங்கி வந்தார். ஆனால் அந்த பந்து ரோகித் சர்மா பேட்டில் பட்டு எட்ஜாகியது.

அதனை 30 யார்ட் வளையத்திற்குள் நின்றிருந்த டிராவிஸ் ஹெட் பின்னால் ஓடி சென்று கவர் பாய்ண்ட் திசையில் அசாத்தியமாக கேட்ச் பிடித்தார். இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதுபோல் உலகக்கோப்பை தொடரில் அரைசதம் அடிக்க முடியாமல் ரோகித் சர்மா வெளியேறுவது 5வது முறையாகும். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications