ரோஹித் சர்மா ஓபனிங் இறங்குவாருன்னு பகல் கனவு காணாதீங்க.. அது நடக்க வாய்ப்பே இல்லை
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காயத்தில் இருந்த ரோஹித் சர்மா அணியில் இடம் பிடித்துள்ளார். அதே சமயம், துவக்க வீரர்கள் முரளி விஜய் - ராகுல் இருவரும் அணியில் தங்கள் இடத்தை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் ரோஹித் துவக்க வீரராக களம் இறங்குவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ரோஹித் சர்மா காயம்
ரோஹித் சர்மாவுக்கு முதல் டெஸ்டில் காயம் ஏற்பட்டது. அதனால், இரண்டாவது டெஸ்டில் ஆடவில்லை. ரோஹித்துக்கு பதிலாக ஹனுமா விஹாரி இரண்டாவது டெஸ்டில் ஆடினார். இரண்டாவது டெஸ்டில் ஆடிய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மூன்றாவது டெஸ்டுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாயங்க் அகர்வால் இடம் பெற்றார்
இந்த அணியில் ஹனுமா விஹாரி மற்றும் காயத்தில் இருந்து குணமடைந்த ரோஹித் சர்மா இருவருமே இடம் பெற்றுள்ளனர். ப்ரித்வி ஷா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றார் மாயங்க் அகர்வால். முரளி விஜய் - ராகுல் இல்லாத நிலையில் துவக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு பெற்றுள்ளார் மாயங்க்.
ஹனுமாவுக்கு தான் வாய்ப்பு
இவருடன் களம் இறங்க உள்ள துவக்க வீரர் யார்? ரோஹித் சர்மாவா? ஹனுமா விஹாரியா? இது தான் ரசிகர்களின் கேள்வி. பலரும் ரோஹித் சர்மா தான் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என கூறி வருகிறார்கள். ஆனால், ஹனுமா விஹாரி தான் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார் என தேர்வுக் குழுவில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதன் மூலம், ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் தான் பேட்டிங் செய்வார் என கூறப்படுகிறது. எனினும், கடைசி நேரத்தில் மாறுதல் ஏற்பட்டு ரோஹித் சர்மா துவக்க வீரராக களம் இறங்கி விட மாட்டாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த போட்டியில் மற்றொரு மாற்றமாக உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி - 3வது ஆஸி. டெஸ்ட்
கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.


Click it and Unblock the Notifications