அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், டெய்லண்டர்களுடன் பேட்டிங் ஆடிய விதம் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

அதிகபட்சமாக இந்திய அணியின் கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காக, பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது.
சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஜடேஜா 6வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை எட்டும் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் டெய்லண்டர்கள் யாருக்கும் பெரியளவில் பேட்டிங் செய்ய தெரியாது என்பதால், அவர்களை ஒருங்கிணைத்து சூர்யகுமார் யாதவ் ஆடுவார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் டெய்லண்டர்களை எதிர்முனையில் வைத்து கொண்டு முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு மாறினார். இதன் காரணமாக முகமது ஷமி ஆட்டமிழந்த நிலையில், பும்ராவை பேட்ஸ்மேனாக பாவித்து ஒரு ரன் எடுத்து மாறினார். வழக்கமாக டெய்லண்டர்களுடன் விளையாடும் பேட்ஸ்மேன்கள் முடிந்த வரை அவர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
ஆனால் சூர்யகுமார் யாதவ் டெய்லண்டர்களுக்கு பேட்டிங்கை கொடுத்து எதிர்முனைக்கு சென்றார். அதேபோல் பவுண்டரிகளை அடிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. இதன் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணி பிளேயிங் லெவனில் ஃபினிஷர் ரோலில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வந்தார். மிகமுக்கியமான போட்டியில் அவர் சொதப்பியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.