மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பும்ரா சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலான புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் பும்ராவின் பந்துவீச்சில் தங்களின் விக்கெட்களை இழந்து உள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் பும்ரா ஆறு இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இரண்டு அணிகளிலும் சேர்த்து பார்க்கும் போது அவரே அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

அதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள முதல் ஏழு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எத்தனை முறை வீழ்த்தி இருக்கிறார்? என்ற விவரம் வெளியாகி உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் ஏழு பேட்ஸ்மேன்கள் இந்த மூன்று போட்டிகளில் பும்ராவுக்கு எதிராக எத்தனை பந்துகளை சந்தித்து, எத்தனை ரன்களை எடுத்தார்கள்? என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது.
அதில் டிராவிஸ் ஹெட் தவிர மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பும்ராவுக்கு எதிராக மிக மோசமாக செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக மூன்று போட்டிகளிலும் விளையாடிய உஸ்மான் கவாஜா பும்ராவின் பந்து வீச்சில் 71 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு முறை விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்த தொடரில் அறிமுகமான மற்றொரு துவக்க வீரரான நாதன் மெக்ஸ்வீனி பும்ராவுக்கு எதிராக 66 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரும் தான் ஆடிய ஆறு இன்னிங்ஸ்களில் பும்ராவின் பந்து வீச்சில் நான்கு முறை விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்த மூன்று போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் பும்ராவுக்கு எதிராக 54 பந்துகளை சந்தித்து 20 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முறை விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
மார்னஸ் லாபுஷேன் பும்ரா பந்துவீச்சில் 72 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இரண்டு முறை பும்ராவின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்த தொடரில் இரண்டு சதம் அடித்த டிராவிஸ் ஹெட் பும்ராவுக்கு எதிராக சிறந்த செயல்பாட்டை வைத்துள்ளார். அவர் பும்ராவுக்கு எதிராக 91 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் எடுத்து இருக்கிறார். அதே சமயம், இரண்டு முறை பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உள்ளது. டிராவிஸ் ஹெட், பும்ராவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தாலும் அதில் ஃபால்ஸ் ஷாட் (False shot) அளவு அதிகம். அதாவது பந்து சரியான முறையில் பேட்டில் படாமல், எட்ஜ் ஆகியோ அல்லது பந்தை அடிக்க நினைத்த திசையில் செல்லாமல் வேறு திசையில் சென்றோ ட்ராவிஸ் ஹெட்-க்கு ரன்கள் கிடைத்தன. சராசரியாக 20 சதவீதத்துக்கும் மேல் டிராவிஸ் ஹெட் இதுபோல ரன்களை எடுத்தார்.
அடுத்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, பும்ராவுக்கு எதிராக 30 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஒரு முறை தனது விக்கெட்டை பும்ராவின் பந்து வீச்சில் இழந்து இருக்கிறார். மிட்செல் மார்ஷ் பும்ராவின் பந்து வீச்சில் 47 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு முறை விக்கெட்டை இழந்து இருக்கிறார். இதன் மூலம் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.