ஐசிசி தரவரிசை பட்டியல்.. டாப் 5ல் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்.. தட்டித்தூக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா!
மும்பை: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் 3 வீரர்கள் டாப் 5 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். அதேபோல் பவுலிங்கிலும் டாப் 5ல் இரு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோல் உலகக்கோப்பை தொடர் தொடங்கும் போது 9வது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர். அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அசத்திய ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் 16 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முகமது சிராஜ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் கேசவ் மஹாராஜ் உள்ள நிலையில், 4வது இடத்தில் பும்ரா நீடிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவ் 6வது இடத்திலும், இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ஜடேஜா இருவரும் 10வது இடத்திலும் உள்ளனர். உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும், இந்திய அணியின் 8 வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் டாப் 10 இடங்களை பிடித்து அசத்தி இருப்பது ரசிகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications