எந்தப் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.. ரோஹித் சர்மா
சிட்னி: பெரிய போட்டிகளின்போது எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நாளை உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் ரோஹித் சர்மா போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
- கண்டிப்பாக இந்தப் போட்டியில் நாங்கள் வெல்வோம். அதில் சந்தேகமே வேண்டாம்.
- பெரிய போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
- ஸ்பின்னர்களுக்கு இங்கு முக்கியப் பொறுப்புள்ளது. அதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
- தொடக்க ஆட்டக்காரர்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. அதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
- விக்கெட் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
- எந்த பிட்ச்சாக இருந்தாலும் அதற்கேற்றார் போல ஆட நாங்கள் தயார். நம்பிக்கையோடு உள்ளோம்.
- 7 போட்டிகளில் நாங்கள் 70 விக்கெட்களை எடுத்துள்ளோம்.
- ஒவ்வொருமுறையும் எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளோம். எனவே என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.
- இரு அணிகளுக்கும் இடையே நிச்சயம் போட்டி அனல் பறக்கும்.
- ஸ்லெட்ஜிங் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
- அளவோடு இருந்தால் எதுவுமே பிரச்சினை இல்லைதான். யாரும் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.
- நாங்கள் எங்களது எல்லையைத் தாண்ட மாட்டோம்.
- யாராவது எல்லை தாண்டி வந்தால் நாங்கள் அமைதியாக இருக்கவும் மாட்டோம் என்றார் ரோஹித் சர்மா.
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் நடந்த முத்தரப்புத் தொடரின்போது ரோஹித் சர்மாவை, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி கிண்டலடித்திருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் என்பது நினைவிருக்கலாம்.
- கடந்த 35 வருடங்களில் சிட்னியில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே (2008ம் ஆண்டு) ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
- கடந்த 7 போட்டிகளிலும் இந்தியா முதல் முறையாக பேட் செய்தபோதெல்லாம் 300 மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்துள்ளது முக்கியமானது.
அரை இறுதியைப் பொறுத்தவரை 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தான் முன்னேறிய 6 அரை இறுதிப் போட்டிகளிலும் வென்றுள்ளது. இருப்பினும் சிட்னி மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், இந்தியா தற்போது நல்ல பார்மில் உள்ளதாலும் ஆஸ்திரேலியத் தரப்பு சற்று கவலையுடன்தான் உள்ளது.
Story first published: Wednesday, March 25, 2015, 13:23 [IST]
Other articles published on Mar 25, 2015


Click it and Unblock the Notifications