அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 140 கோடி மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் மனதை உடைத்த 2003ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பழி தீர்க்கும் விதமாக இந்தியாவுக்கு இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது.

இந்த தொடரில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா என்றாலே 90 கிட்ஸ் களுக்கு பல தூக்கமில்லா இரவுகளை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐந்து பேர் மட்டும் இந்தியாவுக்கு ஆபத்தை தரக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணியின் முதல் அபாயகரமான வீரர் என்றால் அது டேவிட் வார்னர் தான். இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் வார்னருக்கு இருக்கிறது. மேலும் பைனல் போன்ற பெரிய போட்டிகளில் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். வேகப்பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என இரண்டிலுமே அடித்த ஆடுவார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் மேக்ஸ்வெல். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தவர் மேக்ஸ்வெல். சுழற் பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிலுமே 360 டிகிரி கோணத்தில் அடிக்கக்கூடியவர். மேக்ஸ்வெல் விரைவில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு இருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆடம் சாம்பா. ஆஸ்திரேலிய அணியில் அதிக விக்கெட் வீழ்த்தக்கூடிய வீரராக திகழும் ஆடம் சாம்பா, எத்தகைய வீரராக இருந்தாலும் நெருக்கடிக்கு ஆளாக்குவார். இதற்கு எடுத்துக்காட்டாக விராட் கோலியை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் எட்டு முறை அவர் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் வேக பந்துவீச்சாளர் ஸ்டார்க். தன்னுடைய அதிவேக இடதுகை வேகப்பந்துவீச்சால் ஸ்டார்க் எண்ணற்ற பேட்ஸ்மேன்களை திணற வைத்திருக்கிறார். மேலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற ஆட்டங்களில் அவர் தன்னுடைய அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹேசல்வுட். அவர் எவ்வாறு விளையாடுவார் எவ்வளவு நெருக்கடி கொடுப்பார் என்று அரையிறுதியிலே நாம் பார்த்திருப்போம். இதேபோன்று பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிச்சல் மார்ஸ், மார்க்கஸ் டோனிஸ், மானஸ் லாபஸ்சேன் என நெருக்கடிகளை கொடுக்கும் பல வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.