அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள பிட்சை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது செல்ஃபோனில் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. முன்னதாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி கெத்தாக இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஐசிசி பிட்ச் கண்காணிப்பார்ளர் ஆண்டி அட்கின்சன் புதிய பிட்சை பயன்படுத்த அறிவுறுத்தியதாகவும், ஆனால் பிசிசிஐ தரப்பில் இந்தியா - இலங்கை அணிகள் ஆடிய பிட்ச் தயார் செய்யப்பட்டதாகவும் புதிய சர்ச்சை உருவாகியது. இதனால் பிட்ச் மந்தமாக மாறி சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக நியூசிலாந்து மீடியாக்கள் பிசிசிஐ மற்றும் இந்திய அணி மீது சரமாரியாக புகார்களை முன் வைத்தன.
ஆனால் அரையிறுதி போட்டியில் சுழலுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படாதது தெரிய வந்தது. இதனால் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய ஜாம்பவான்களை பிட்ச் குறித்து விமர்சித்த அத்தனை பேரையும் வெளுத்து வாங்கினர். இதேபோல் அகமதாபாத் மைதானத்திலும் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படுவதாக சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு புதிய பிட்ச் பயன்படுத்தப்படாமல், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் தான் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பிட்சில் புற்கள் இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அகமதாபாத் பிட்சை பார்வையிட்டுள்ளார். அப்போது பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தனது செல்ஃபோன் மூலமாக பிட்சை புகைப்படங்களும் எடுத்து கொண்டார். இதனால் இந்திய ரசிகர்கள் தோல்விக்கு காரணம் தேடி வருவதாக கம்மின்ஸை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எவ்வாறு தயாராகி வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பிட்ச் மாற்றப்படும் என்பதற்காக கம்மின்ஸ் புகைப்படம் எடுக்கவில்லை. பிட்சின் எந்த லைன் மற்றும் லெந்தில் பந்துவீச வேண்டும், பவுலர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவே புகைப்படம் எடுத்ததாக பார்க்கப்படுகிறது.