அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குண்டப்பா விஸ்வநாத் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
1975 மற்றும் 79 உலக கோப்பையில் இந்திய அணியின் பலம் வாய்ந்த வீரராக திகழ்ந்தவர் குண்டப்பா விஸ்வநாத். அவர் நடப்பு உலக கோப்பை தொடர் குறித்து இந்தியாவுக்கு பல அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணியில் தற்போது தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இந்த இரண்டு வீரர்களுமே எப்படிப்பட்ட வேகப்பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கும் திறமை உடையவர்கள். இதைப் போன்று நடுவரிசையில் மார்ஸ், ஸ்மித் ஆகியோர் விளையாடுகிறார்கள். இதில் மேக்ஸ்வெல் அன்றைய ஆட்டத்தில் சிறந்து விளையாடினால் அந்த டீமில் பேலன்ஸ் சிறப்பாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா கொஞ்சம் கூட அசாதாரணமாக நினைத்து விளையாட கூடாது. இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த வெற்றி உறுதி என்று நாம் முடிவு பண்ணி விடக்கூடாது. அந்த வெற்றி என்பது நிச்சயம் எளிதாக கிடைக்காது. இறுதிப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணி நல்ல தொடக்கத்தை கொடுத்து விட்டார்கள் என்றால் போட்டியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள்.

கடைசி பந்து வரை ஆஸ்திரேலியா அணி சண்டை போடுவார்கள். எனவே இறுதிப்போட்டி என்பது சுலபமாக இல்லாமல் நிச்சயம் கடும் போட்டிகள் நிறைந்த ஆட்டமாக தான் இருக்கும். இந்த தொடரில் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம் நமது வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தியதை நான் சிறந்த விஷயமாக பார்க்கிறேன்.நமது அணியில் அனைவருமே நன்றாக விளையாடுகிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை புரிந்து கொண்டு செய்கிறார்கள். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், கேப்டன் என அனைவருமே நல்ல பணிகளை செய்கிறார்கள்.