உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. குவியும் சினிமா நட்சத்திரங்கள்.. எப்படிப்பா டிக்கெட் கிடைச்சது?
அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக லக்னோ அணி உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஷ் கொயங்கா பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 1.3 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பேட் மற்றும் பந்து மூலம் நடக்க போகும் யுத்தத்தை பார்க்க பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதன் மூலமாக இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை அதிக மக்கள் நேரில் கண்டு ரசித்த போட்டி என்ற புதிய மைல்கல்லை எட்டவுள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கொயங்காவின் குடும்ப உறுப்பினரான ஹர்ஷ் கொயங்கா பதிவிட்ட ட்வீட் ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஹர்ஷ் கொயங்கா, எனது தொழில் ரீதியான நண்பர்களில் ஒருவர் கூட உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கிற்காக பணம் செலவழிக்கவில்லை. அவர்கள் அனைவரும் எப்படியோ இலவச டிக்கெட்டுக்கான பாஸ் பெற்றுவிட்டார்கள். கோடீஸ்வரர்களான அவர்கள் அனைவரும் பணம் செலவழிக்க விரும்பாமல் டிக்கெட்டை பெற்றதுதான் முரணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவது குதிரை கொம்பாக இருந்தது. நேரடி டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்பட்ட நிலையில், புக் மை ஷோ செயலி மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனால் உலகக்கோப்பை டிக்கெட் விற்பனையில் பெரியளவில் ஊழல் செய்யப்பட்டதாக பலராலும் நிரூபிக்கப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கில் வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என்று ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு எப்படி டிக்கெட் கிடைத்தது என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். என்ன தான் இலவச பாஸ் வழங்கப்பட்டாலும், அதனை கிரிக்கெட் சார்ந்த நிர்வாகிகள், அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்காமல் ஆடம்பரமாக வாழும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களின் படங்களை விளம்பர செய்ய வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications