உலக கோப்பை இறுதி போட்டி - இன்று விராட் கோலி 3 மகத்தான வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவர்கள் லீக் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் தான் தோல்வியை தழுவினார்கள். அதன்பிறகு தொடர்ந்து 8 போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய இறுதி ஆட்டத்தில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இன்றைய இறுதிப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே இரண்டு உலக கோப்பையை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறுவார்.
அதன் பிறகு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இதே பட்டியலில் இணைவார். ஏனெனில் இவ்விருவரும் 2011 உலக கோப்பையில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார்கள். இதேபோன்று தற்போது விராட் கோலி நடப்பு தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 711 ரன்கள் குவித்து இருக்கிறார்.இன்றைய ஆட்டத்தில் மட்டும் விராட் கோலி 89 ரன்கள் சேர்த்தால், உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் 800 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு சேரும்.
இதேபோன்று விராட் கோலி நான்கு உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி 1741 ரன்கள் குவித்து இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் மட்டும் விராட் கோலி கூடுதலாக இரண்டு ரன்களை சேர்த்தால், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடிப்பார். ரிக்கி பாண்டிங் தற்போது 1743 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
முதலிடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2278 ரன்கள் உடன் உள்ளார். இதேபோன்று விராட் கோலி ஏற்கனவே ஐம்பதாவது சதத்தை அடித்து உள்ள நிலையில் இன்று 51 வது சதத்தை அடிப்பாரா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி எவ்வளவு நேரம் நின்று விளையாடுகிறாரோ அவ்வளவும் இந்தியாவுக்கு நல்லது.


Click it and Unblock the Notifications