அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ளது.
இந்த போட்டியை காண ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் டாஸ் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதும் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

ஆனால் அவர்களுக்கு சர்ப்ரைஸ் வழங்கும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஒரு முடிவை எடுத்தார். ஆம் இறுதி போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்லுங்க என அவர் கூறினார். இது மிகப் பெரிய ஆச்சரியத்தை இந்தியாவுக்கு கொடுத்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாட் கம்மின்ஸ், நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம்.
ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டாவதாக பந்து வீசும் போது பனிப்பொழிவு ஏற்படும் என நினைக்கிறேன். போகப் போக பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும். இந்த தொடரில் முதலில் தோல்வியை தழுவினாலும் பிறகு நாங்கள் சரியான முடிவை எடுத்து வெற்றியை பெற்று வருகிறோம். இந்தியாவை இதற்கு முன் பல போட்டிகளில் எதிர்கொண்டு இருப்பதால் சிக்கல் இல்லை. எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்களும் முதலில் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்போம். ஆடுகளம் மிகவும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இது மிகப்பெரிய போட்டி. இதனால் முதலில் ரன்களை குவித்து பிறகு அதனை தற்காத்துக் கொள்வோம். இது கிரிக்கெட் உலகிலேயே மிகப்பெரிய போட்டியாக இருக்கிறது. இதனால் அமைதியாக இருந்து விளையாட வேண்டும்.
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வழி நடத்துவது என்ற என் கனவுகள் உண்மையானது போல் இருக்கிறது. எனினும் இன்றைய ஆட்டத்தில் நன்றாக விளையாடினால் மட்டுமே எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆடுகளத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். நாங்கள் கடந்த 10 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறோம்.
எங்கள் அணியில் இன்றைய ஆட்டத்தில் இந்த மாற்றமும் இல்லை என்று ரோகித் சர்மா கூறினார். அஸ்வின் இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அந்த மாற்றத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.