புனே : ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச அணி முதல் முறையாக இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் ஷஹிபுல் ஹசன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹுசைன் களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், கேப்டனாக பொறுப்பேற்று இருப்பது என்னுடைய குடும்பத்திற்கும் எனக்கும் மிகவும் பெருமையான தருணமாகும். நாங்கள் இன்று பேட்டிங்கை தேர்வு செய்ய இருக்கிறோம். காரணம் ஆடுகளம் மிகவும் புதிதாக இருக்கிறது.
இதனால் ரன்கள் குவிக்க சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். அணிக்கும் இதுதான் நல்லதாக இருக்கும். ஷகிபுல் ஹசன் இன்னும் உடல் தகுதியை பெறவில்லை. இதனால் அவருக்கு பதில் நசும் அகமது களம் இறங்குகிறார். இந்தியாவிற்கு எதிராக எங்களுக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றோம். இன்றும் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
இன்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் இரு அணிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறினார். இதேபோன்று தஸ்கின் அகமதும் இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை என நஜ்முன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நானும் முதலில் பந்து வீச தான் நினைத்தேன். அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முதலில் பந்து வீசுவது தற்போது கை கொடுக்கிறது. அணியில் மாற்றம் செய்ய எந்த காரணமும் இல்லை. இன்றைய உலகக் கோப்பையில் அதுதான் முக்கியம். வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள்.
உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது அவர்கள் கிரிக்கெட்டை மகிழ்வித்து விளையாடுகிறார்கள். தற்போது வரை அணி நன்றாக தான் இருக்கிறது. இதே போல் நாங்கள் தொடர்ந்து விளையாடுவோம் என நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் நாங்கள் செய்யவில்லை என ரோகித் சர்மா கூறினார்.