IND vs ENG -4வது டெஸ்டில் அஸ்வினுக்கு ஓய்வு? பும்ராவும் இல்லாததால் இந்தியாவுக்கு பின்னடைவு.. காரணம்?
Ashwin : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும். இதனால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடி உள்ளதால் அவருக்கு நான்காவது டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட உள்ளது. அதே சமயம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் நான்காவது டெஸ்டில் ஓய்வு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் குடும்பத்தில் அவருடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.
இதனால் அவர் மூன்றாவது டெஸ்டில் பாதியில் விலகி, அதன் பிறகு மீண்டும் வந்து இணைந்தார். இதனால் நான்காவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. நான்காவது டெஸ்ட்டுக்கும் ஐந்தாவது டெஸ்ட்டுக்கும் கிட்டத்தட்ட ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. இதனால் நான்காவது டெஸ்டில் விலகினால் சுமார் பத்து நாட்களுக்கு மேல் அவர் ஓய்வில் இருந்து தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம்.
இதனால் அவருக்கு ஓய்வு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அஸ்வின் ஒருவேளை விளையாடாமல் போனால், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் இந்திய அணிக்குள் வரலாம். இதன் மூலம் குல்தீப்பின் இடம் தப்பிக்கும். ஒருவேளை அஸ்வின் தமக்கு ஓய்வு தேவையில்லை என்று கூறிவிட்டால் குல்தீப் யாதவை சேர்ப்பதா? அக்சர் பட்டேலை சேர்ப்பதா? என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.
இதை போன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு திரும்புகிறார். இதன் மூலம் ரஜத் பட்டிதார், தன்னுடைய இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. கேஎல் ராகுல் அணிக்கு திரும்பினால், அது இந்தியாவின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications