ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுக்கான இந்திய டெஸ்ட் அணி எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டம் தான் இன்றைய டெஸ்ட் போட்டியாகும்.
இந்த போட்டியில் அறிமுக விக்கெட் கீப்பராக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த 23 வயதான துருவ் ஜூரல் களமிறங்குகிறார். இதுவரை வெறும் 15 முதல் தர போட்டிகளில் தான் ஜுரல் விளையாடி இருக்கிறார். இதில் ஒரு சதம்,ஐந்து அரை சதம் அடங்கும்.

அதிகபட்சமாக 249 ரன்களை குவித்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடியதன் மூலம் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதன் மூலம் 23 வயது 25 நாளில் ஜூரல் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி தன்னுடைய 24 ஆவது வயதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அறிமுகமானார்.
தற்போது இதனை ஜூரல் முறியடித்திருக்கிறார். இந்தியாவுக்காக இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பட்டியலில் பார்த்தீவ் பட்டேல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் தன்னுடைய 17 ஆவது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய 19 ஆவது வயதில் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராக விளங்கிய ரிஷப் பந்த் தன்னுடைய 21வது வயதில் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென அவர் ஒரு இடத்தை பிடித்திருந்த நிலையில் விபத்து காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். இதேபோன்று இஷான் கிஷன் தன்னுடைய 24 ஆவது வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டு தான் அறிமுகமானார்.
ரிஷப் பண்ட் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிசன் மன சோர்வு ஏற்பட்டதாக கூறி தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் தான் தற்போது ஜூரலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜூரல் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.